8 மசோதாக்கள் நிறைவேற்றம் கர்நாடக சட்டசபை நடவடிக்கைகள் 45¾ மணி நேரம் நடந்தது சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி


8 மசோதாக்கள் நிறைவேற்றம் கர்நாடக சட்டசபை நடவடிக்கைகள் 45¾ மணி நேரம் நடந்தது சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2018 5:00 AM IST (Updated: 22 Dec 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை நடவடிக்கைகள் 45¾ மணி நேரம் நடைபெற்றது என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.

பெலகாவி, 

கர்நாடக சட்டசபை நடவடிக்கைகள் 45¾ மணி நேரம் நடைபெற்றது என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.

10 வேலை நாட்கள்

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. அந்த கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி தொடங்கி இன்று (அதாவது நேற்று) வரை 10 வேலை நாட்கள் நடைபெற்றது. இந்த 10 நாட்களில் சபை 45¾ மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் திருப்தியை தந்துள்ளது.

13 அறிக்கைகள்

இந்த கூட்டத்தில் கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு நிலை குழுக்கள் மூலம் 13 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

விதி எண் 60-ன் கீழ் 4 தீர்மானங்கள் வந்தது. அதில் 2 தீர்மானங்கள் விதி எண் 69-ன் கீழ் விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டது. பூஜ்ஜிய நேரத்தில் 24 பிரச்சினைகள் மீதும், விதி எண் 69-ன் கீழ் 5 பிரச்சினைகள் மீதும் விவாதம் நடைபெற்றது.

146 கேள்விகளுக்கு பதில்

இந்த கூட்டத்தொடருக்காக மொத்தம் 3,060 எழுத்துப்பூர்வமான கேள்விகள் வந்தன. இதில் 2,217 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டன. அதே ேபால் சபையில் பதிலளிக்க 150 கேள்விகள் அனுப்பப்பட்டன.

அதில் 146 கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் 2 தனியார் தீர்மானங்கள் வந்தன. 116 கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கும் பதில் வழங்கப்பட்டன. 14 பிரச்சினைகள் மீது அரை மணி நேரம் விவாதத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

8 மசோதாக்கள் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தொடரில் 4 உரிமை மீறல் தீர்மானங்கள் பெறப்பட்டன. இதில் 2 தீர்மானங்கள் சபையில் விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் 12 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.


Next Story