காதல் தோல்வியால் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை சாவுக்கான காரணத்தை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார்
தார்வார் போலீஸ் பயிற்சி பள்ளியில் காதல் தோல்வியால் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி,
தார்வார் போலீஸ் பயிற்சி பள்ளியில் காதல் தோல்வியால் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது சாவுக்கான காரணத்தை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் மூலம் வெளியிட்டுள்ளார்.
போலீஸ்காரர்
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா போரகி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் கோட்டாரகஸ்தி(வயது 24). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த போலீஸ் தேர்வில் வெற்றிபெற்று போலீஸ்காரர் ஆனார். தற்போது அவர் தார்வாரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில், ஆயுதப்பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்தார், அந்த வீடியோடிவில் அவர், ‘‘நான் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறேன். என் காதலி என்னை ஏமாற்றி விட்டாள். என்னிடம் நெருங்கி பழகிவிட்டு தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறாள்.
அதனால் நான் வாழ்க்கையில் வெறுப்படைந்துள்ளேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று உருக்கமாக பேசியிருக்கிறார். பின்னர் அதை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
மேலும் தனது காதல் தோல்வி குறித்து அவர் 23 பக்கங்கள் கொண்ட உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த வித்யாகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோகரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story