2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் காஞ்சீபுரம் கோர்ட்டில் அபிராமி ஆஜர்
காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் அபிராமி ஆஜர் ஆனார்.
காஞ்சீபுரம்,
சென்னையை அடுத்த குன்றத்தூர் 3-ம் கட்டளையை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி அபிராமி(வயது 37). இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர். அபிராமி, தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது 2 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அபிராமி, அவரது கள்ளக்காதலன் சுந்தரம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அபிராமி ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அபிராமி மீதான கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை காஞ்சீபுரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்க உள்ளதாக அரசு வக்கீல் கூறியதால் ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றம் 2-ல் நேற்று முதல் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. இதற்காக அபிராமியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குன்றத்தூர் போலீசார் காஞ்சீபுரம் அழைத்து வந்தனர். அரசு தரப்பில் வக்கீல் அய்யம்பேட்டை சம்பத் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, ஜனவரி 2-ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story