கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி - வனத்துறை அதிகாரி தகவல்


கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி - வனத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2018 11:15 PM GMT (Updated: 21 Dec 2018 10:09 PM GMT)

கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமை மாறா காடாக அமைந்துள்ளது. வனவிலங்குகள் சரணாலயத்தில் புள்ளி மான், வெளிமான், நரி, முயல், காட்டுப்பன்றி, மட்டக்குதிரை, குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

பறவைகள் சரணாலயத்திறக்கு 256 வகையான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் உணவுக்காக அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வந்து செல்கின்றன.

இதில் பூநாரை, செங்கால் நாரை, கடல்காகம், கடல் ஆலா, உள்ளான் வகை, நாரை வகைகள், பூலக்கடா உள்ளிட்ட பறவைகள் வருகின்றன.

இங்கு ஆண்டு தோறும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து பறவைகள், விலங்குகளை பார்த்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சென்று விலங்குகளை பார்வையிட வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம்(நவம்பர்) 15-ந்தேதி வீசிய கஜா புயலால் வன விலங்குகள் சரணாலயத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும், மான்கள், காட்டு பன்றி, குரங்குகள் உயிரிழந்தன.

புயலால் தொடர்ந்து மழை பெய்ததால் சரணாலயத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.

இதை தொடர்ந்து வனவிலங்குகள் சரணாலயத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வனசரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story