வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கல் சிறப்பு ஏற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
வண்டலூர்,
வண்டலூர் பூங்காவுக்கு கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மற்றும் காணும் பொங்கலையொட்டி 1 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தனர். அதே போல இந்த ஆண்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் பொங்கல் மற்றும் காணும் பொங்கலையொட்டி பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் பூங்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் போலீஸ் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாநகர போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, மின்சார வாரியம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைகளை சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்வையாளர்கள் ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளளுதல், பொங்கல் பண்டிகை காலத்தில் 4 லட்சம் லிட்டர் குடிநீரை குடிநீர் வடிகால் வாரியம் வழங்குவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூடுதல் பஸ்கள்
பல்வேறு வழிதடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும், அவற்றை நெறிபடுத்தவும் மாநகர போக்குவரத்து துறையிடம் கேட்கப்பட்டுள்ளது. அவசர கால மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் எதிர்பாராத தீ விபத்துகளை தடுப்பதற்கும் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க தீயணைப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்தை வலியுறுத்தப்பட்டது.
முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழு ஒன்று ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story