சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு


சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2018 5:15 AM IST (Updated: 22 Dec 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய சொராபுதீன் சேக் போலி என் கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்து மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மும்பை, 

அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய சொராபுதீன் சேக் போலி என் கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்து மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

போலி என்கவுண்ட்டர் வழக்கு

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ல‌ஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்பு இருப்பதாக பிடிபட்ட சொராபுதீன் சேக் என்பவரை 2005-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். 3 நாட்களுக்கு பிறகு அவரது மனைவி கவுசரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதே ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி சொராபுதீன் சேக்கின் உதவியாளர் துல்சி பிரஜாபதியும் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சொராபுதீன் சேக்கும், அவரது மனைவி கவுசரும் ஒரு பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக போலீசாரால் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், பின்னர் அவர்கள் ஐதராபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் சாங்கிலிக்கு ஒரு பஸ்சில் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. துல்சி பிரஜாபதி உதய்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரும் குஜராத்-ராஜஸ்தான் மாநில எல்லையில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மோடியை கொல்ல சதி

கொல்லப்பட்ட 3 பேரும் அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியை கொல்ல சதி செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த என்கவுண்ட்டர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பா.ஜனதா தலைவரான அமித்‌ஷா, அப்போது குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்தார். போலி என்கவுண்ட்டர் வழக்கில் அவரது பெயர் பலமாக அடிபட்டது. இதையடுத்து குஜராத் மாநில சி.ஐ.டி. போலீசார் போலி என்கவுண்ட்டர் விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கினர்.

சொராபுதீன் சேக் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டை அணுகியதை தொடர்ந்து, 2010-ம் ஆண்டு வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் அமித்‌ஷாவை சி.பி.ஐ. கைது செய்தது.

அமித்‌ஷா விடுவிப்பு

வழக்கை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு விசாரணை குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்த நிலையில், அமித்‌ஷா, ராஜஸ்தான் உள்துறை மந்திரியாக இருந்த குலாப்சந்த் கட்டாரியா, ஐ.பி.எஸ். அதிகாரிகளான வன்சரா, பி.சி.பாண்டே உள்பட 38 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக 2014-ம் ஆண்டு அமித்‌ஷா, குலாப்சந்த் கட்டாரியா, 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 பேரை வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

சாட்சிகள் பல்டி

மற்ற 22 பேர் மீது கோர்ட்டு விசாரணையை தொடர்ந்தது. இதில் 21 பேர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் ஆவர். ஒருவர் பண்ணை வீட்டின் உரிமையாளர் ஆவார்.

இந்த வழக்கில் 210 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. இதில் 92 பேர் கோர்ட்டில் பிறழ் சாட்சியம் அளித்து பல்டி அடித்தனர். இதனால் வழக்கு வலுவிழந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 13 ஆண்டுகளாக அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.ஜெ.சர்மா நேற்று தீர்ப்பு கூறினார்.

22 பேரும் விடுதலை

அப்போது நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து பரபரப்பு தீர்ப்பை அளித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில், 3 பேரின் உயிரை பறிகொடுத்த குடும்பத்துக்கு கோர்ட்டு ஆறுதல் தெரிவிப்பதாகவும், ஆனால் சட்டத்தின் நடைமுறையில் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு அளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். 22 பேருக்கு எதிராகவும் போதிய ஆவணங்களை தாக்கல் செய்து குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

தீர்ப்பின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தனர். தீர்ப்பை கேட்ட அவர்கள் நிம்மதி அடைந்தனர். கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சொராபுதீன் சேக்கின் சகோதரர் ருபாபுதீன், தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story