நாகை கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை - 50 பெண்கள் உள்பட 225 பேர் கைது


நாகை கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை - 50 பெண்கள் உள்பட 225 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 5:00 AM IST (Updated: 22 Dec 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் உள்பட 225 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

கிராம நிர்வாக அலுவலர் பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை மற்றும் மின்வசதி செய்து தர வேண்டும்.

குறைதீர்க்கும் கூட்டங்களை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந்தேதி முதல் நாகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் வேதை.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாகீர் உசேன், திருவாரூர் மாவட்ட தலைவர் கதிர், மக்கள் தொடர்பு செயலாளர் செந்தில்குமார், மகளிர் பிரிவு செயலாளர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வட்ட தலைவர்கள் மாரியப்பன், ரங்கநாதன், குமரவடிவேல், முரளி, நவநீதம், திருமலை சங்கு, ஜெயபிரகாஷ், பிரபாகரன், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 225 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story