சாராயம் குடிக்கும்போது தகராறு: பாட்டிலால் குத்தி மீனவர் படுகொலை மற்றொரு மீனவர் கைது


சாராயம் குடிக்கும்போது தகராறு: பாட்டிலால் குத்தி மீனவர் படுகொலை மற்றொரு மீனவர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 4:04 AM IST (Updated: 22 Dec 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் மீனவர் ஒருவர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு மீனவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்,

சென்னை எண்ணூர் திரிசலா குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ஸ்ரீதர் (வயது 48), மீனவர். கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியில் உறவினர் முருகன் வீட்டில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

ராமுவுக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு வீராம்பட்டினத்தில் உள்ள சாராய கடைக்கு அவர் சென்றார். அங்கு சாராயம் குடித்துக் கொண்டிருந்தபோது ராமுவுக்கும், அங்கிருந்த வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு சிவாஜி நகரைச் சேர்ந்த மீனவர் கமல் (40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் இதன்பிறகும் ராமு மீது கமலுக்கு ஆத்திரம் தீரவில்லை.

நேற்று காலை ராமு மீண்டும் சாராயக் கடைக்கு சென்று சாராயம் குடித்தார். அப்போது அங்கு வந்த கமல் ராமுவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சாராய பாட்டிலை உடைத்து, ராமுவின் கழுத்தில் குத்தி விட்டு கமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாகச் செத்தார். சாராயக்கடையில் மீனவர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

கொலையுண்ட ராமுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சுனாமி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருந்த கமலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story