காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து சிகிச்சை பலனின்றி பச்சிளம் குழந்தை சாவு 8 பேர் உயிருக்கு போராட்டம்


காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து சிகிச்சை பலனின்றி பச்சிளம் குழந்தை சாவு 8 பேர் உயிருக்கு போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:30 AM IST (Updated: 22 Dec 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 8 பேர் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர்.

மும்பை, 

காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 8 பேர் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர்.

தீவிர சிகிச்சைப்பிரிவில்...

மும்பை காம்கார் ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அன்றைய தினமே 6 பேர் பலியானார்கள். மேலும் காயம் அடைந்த 175 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தின் போது, பிறந்து ஒரு வாரமே ஆன லலிதா என்ற பெண் குழந்தையும் மீட்கப்பட்டு இருந்தது. புகையில் சிக்கிய அந்த குழந்தைக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதற்காக அந்த குழந்தை அந்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பலி எண்ணிக்கை 11 ஆனது

இந்தநிலையில், நேற்று அதிகாலை 12.20 மணியளவில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதன் மூலம் காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து இருக்கிறது.

ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து 91 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அவர்களுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது. எனவே மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Next Story