மதுரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பயிலரங்கம் - 3 அமைச்சர்கள் பங்கேற்பு


மதுரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பயிலரங்கம் - 3 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 11:00 PM GMT (Updated: 21 Dec 2018 10:41 PM GMT)

மண்டல அளவிலான பிளாஸ்டிக் ஒழிப்பு பயிலரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் 3 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை, 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மதுரை மண்டல அளவிலான பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பயிலரங்கம் மதுரை உலகத்தமிழ்சங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் வரவேற்று பேசினார். சுற்றுச்சூழல்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையாளர் ராஜேந்திர ரத்னூ பேசினார்கள். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றும் நோக்கத்தில் வருகிற 1-ந்தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மட்காத பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மட்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் மாசு இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர்கள் பல்லவி பல்தேவ் (தேனி), வினய் (திண்டுக்கல்), கணேஷ் (புதுக்கோட்டை), மதுரை மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர், சிவகங்கை உதவி கலெக்டர் ஆஷா அஜித், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story