தமிழகம் முழுவதும் ‘ஜாலி ரைடு’ செல்வதற்கு தடை டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகம் முழுவதும் ‘ஜாலி ரைடு’ செல்வதற்கு தடை டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2018 4:30 AM IST (Updated: 22 Dec 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் ஜாலி ரைடு செல்வதற்கு தடை விதிக்கும் ஆணையை பின்பற்றி டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரை கே.கே.நகரை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை, 


தமிழகம் முழுவதும் ஜாலி ரைடு என்ற பெயரில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்கிறார்கள். இவர்கள் சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் மீதும், பிற வாகனங்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்தநிலையில் இன்னும் சில நாட்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அப்போது நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்துகிறார்கள். 2018-ல் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,144 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஜாலி ரைடு செல்வதை நிரந்தரமாக தடை செய்யவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து லைசென்சை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஜாலி ரைடு செல்வதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், புத்தாண்டையொட்டி மதுரையில் ‘ஜாலி ரைடு‘களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து போலீஸ் உதவி கமிஷனர்களும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு நள்ளிரவில் மதுரை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், வாகனங்களில் அதிவேகத்தில் செல்வோர்களை தடுத்த நிறுத்தவும், ‘ஜாலி ரைடு‘ செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மதுரை மாநகர போலீசார் பிறப்பித்துள்ள ஆணையை தமிழகம் முழுவதும் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பின்பற்ற டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story