ரூ.1 கோடியில் சாலை விரிவாக்கம்: மின்கம்பங்கள் இடம் மாற்றும் பணி மும்முரம்


ரூ.1 கோடியில் சாலை விரிவாக்கம்: மின்கம்பங்கள் இடம் மாற்றும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:43 AM IST (Updated: 22 Dec 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை நகரில் மக்கள்தொகை பெருக்கம், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் புதுக்கோட்டை சாலையின் வழியாக தான் செல்கின்றன. அதேபோல தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களும், அங்கிருந்து தஞ்சைக்கு வரக்கூடிய பஸ்களும் இந்த சாலையின் வழியாக தான் செல்கின்றன. இதனால் காலை முதல் மாலை வரை எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தம், ராஜராஜசோழன் மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக பஸ் நிறுத்தம், யாகப்பாநகர் ஆகிய பகுதியில் சாலை சந்திப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

முதல்கட்டமாக பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் 2 பயணிகள் நிழற்குடைகளும், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் 1 பயணிகள் நிழற்குடையும் இடித்து தள்ளப்பட்டன. மேலும் சாலையோரம் இருந்த பெட்டிக்கடை மற்றும் தரைக்கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

சாலை விரிவாக்க பணிக்கு சாலையோரம் நின்ற மின்கம்பங்கள் இடையூறாக இருந்தன. இதனால் மின்கம்பங்களை வேறு இடத்தில் மாற்றி வைக்க வேண்டும் என கூறி, மின்சார வாரியத்திற்கு ரூ.18 லட்சத்தை நெடுஞ்சாலைத்துறை செலுத்தியது. அதன்படி புதுக்கோட்டை சாலையோரம் 22 மின்கம்பங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டு, மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி நேற்று நடைபெற்றது. தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 7 அடி தூரத்திற்குள் உள்ளே இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் புதிய மின்கம்பங்களும், சில இடங்களில் அதே பழைய மின்கம்பங்களையும் மாற்றி வருகின்றனர்.

இந்த பணியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுகுமார் மேற்பார்வையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து கூறும்போது, ஏற்கனவே குழந்தை ஏசு ஆலயம் முன்பு சாலை விரிவுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல 3 இடங்களில் சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டவுடன் சாலை விரிவாக்க பணி தொடர்ந்து நடைபெறும். 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் தான் ரவுண்டானா அமைக்கப்படும். 3 சாலைகள் சந்திப்பு என்பதால் சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி தான் நடைபெறுகிறது. இதுபோன்று இன்னும் பல இடங்களில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது என்றார்.

மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, சாலை விரிவாக்க பணிக்காக புதுக்கோட்டை சாலை, வல்லம் நம்பர்-1 சாலை உள்ளிட்ட பல இடங்களில் 72 மின்கம்பங்களை மாற்றி அமைக்க இருக்கிறோம் என்றனர்.


Next Story