அரியாங்குப்பத்தில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக் கொலை வழிமறித்து தாக்கிய கும்பலுக்கு வலைவீச்சு


அரியாங்குப்பத்தில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக் கொலை வழிமறித்து தாக்கிய கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Dec 2018 11:18 PM GMT (Updated: 21 Dec 2018 11:18 PM GMT)

அரியாங்குப்பத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தையொட்டி உள்ள தமிழக பகுதியான சின்ன இரிசம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபர். தி.மு.க. பிரமுகர். நேற்று மதியம் 2 மணியளவில் நோணாங்குப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் திடீரென வழிமறித்தது.

அவர் சுதாரிப்பதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் கத்தியால் குத்தினார்கள். அருகில் கிடந்த சிமெண்டு பலகைகளை எடுத்து தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்து சந்திரன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இந்தநிலையில் மயங்கி கிடந்த சந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் கொலை நடந்த நோணாங்குப்பத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தநிலையில் கடன் வாங்கியவர்களுக்கு ஆதரவாக சந்திரன் பேசியதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை அந்த கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தியும், தாக்கியும் கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர கொலை குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்டவர் தமிழக பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் என்பதால் சின்ன இரிசம்பாளையம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story