707 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் வழங்கினர்
வேலூரில் நடந்த விழாவில் 707 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் வழங்கினர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2018–19–ம் ஆண்டில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கோ.அரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் கே.வி.வீரமணி பேசியதாவது:–
கடந்த 2011–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது எதிர்கட்சியினர் ‘‘இதனை செயல்படுத்த முடியாது. தேர்தலுக்காக பொய் பிரச்சாரம் செய்கிறார்’’ என்று கூறினர். ஆனால் இன்றும் தொடர்ந்து தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வரை 60 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக அதிக திட்டங்கள் தீட்டியவர் ஜெயலலிதா.
தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணிகளுக்கு 18 ஆயிரம் நிதியுதவி, ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அக்குழந்தைகளின் வங்கிக்கணக்கில் ரூ.25 ஆயிரம் வைப்புதொகை, ஆதரவற்ற பெண்களுக்கு கறவை மாடு, 4 ஆட்டு குட்டிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதனை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து பெண்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் நீலோபர் கபில் பேசுகையில், ‘‘அ.தி.மு.க. அரசு மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. திருமண நிதியுதவி திட்டத்தில் அனைத்து கட்சியினருக்கும் தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தான் திருமண நிதியுதவி திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். பெண்கள் கல்வி கற்று தங்கள் திறமைகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பெண்கள் வாழ்வில் உயர ஏராளமான திட்டங்கள் உள்ளன. அதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்’’ என்றார்.
விழாவில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.ராகவன், வி.ராமு, பெல் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக நலத்துறை திட்ட விரிவாக்க அலுவலர் சாவித்ரி நன்றி கூறினார். விழாவை செய்தி–மக்கள் தொடர்பு அலுவலர் துரைசாமி தொகுத்து வழங்கினார்.