ஆசியாவிலேயே முதன் முறையாக சென்னை இசை நிகழ்ச்சியில் ‘சாக்லேட் ’கார்


ஆசியாவிலேயே முதன் முறையாக சென்னை இசை நிகழ்ச்சியில் ‘சாக்லேட் ’கார்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-22T21:41:06+05:30)

ஆசியாவிலேயே முதன் முறையாக சென்னையில் நடந்து வரும் இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்வதற்காக ‘சாக்லேட்’ கார் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி கடந்த 18-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களை கவர்வதற்காக ‘சாக்லேட் கார்’ வைக்கப்பட்டுள்ளது.

இதனை சமையல் கலை நிபுணர்கள் கேசவ் கிருஷ்ணா, விஸ்வநாதன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதுதொடர்பாக கேசவ் கிருஷ்ணா கூறியதாவது:-

‘டொயோடா’ கார் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘யாரீஸ்’ கார் மாடலை பிரபலப்படுத்துவதற்காக வழங்கியது. அந்த காரை கவரால் சுற்றி, அதன் மீது 5 கிலோ கோக்கோ பட்டர், 3 கிலோ கோக்கோ பவுடர் உள்பட சாக்லேட் கலவையை பூசினோம். காரின் முன்பக்க விளக்கை (லைட்) 4 கிலோ ஜேம்ஸ் சாக்லேட் மூலம் அலங்கரித்தோம்.

மொத்தம் 350 கிலோ எடையிலான சாக்லேட்டை பயன்படுத்தி 4 நாட்கள் செலவு செய்து சாக்லேட் காரை உருவாக்கினோம்.

ஆசியாவிலேயே முதல் ‘சாக்லேட் கார்’ இது தான். காரில் உள்ள சாக்லேட் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத வகையில் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 4 ஏ.சி.க்களுடன் ‘குளுகுளு’ அறையில் சாக்லேட் கார் பாதுகாக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களை சாக்லேட் காரை வியப்புடன் பார்வையிடுகிறார்கள். காரின் முன்பு நின்றுக்கொண்டு ‘செல்பி’ எடுத்து செல்கிறார்கள்.

காரை சுற்றிலும் கீழே சாக்லேட்டை தூவி உள்ளோம். இசை நிகழ்ச்சி முடிவடையும் 25-ந்தேதி அன்று அந்த சாக்லேட்டை பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். காரின் மீது உள்ள சாக்லேட்டை என்ன செய்வது என்பது குறித்து? அந்த கார் நிறுவனம் தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story