பாரம்பரிய உணவு பயிர்கள் உற்பத்தியில் மலைவாழ் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் வனக்கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல்


பாரம்பரிய உணவு பயிர்கள் உற்பத்தியில் மலைவாழ் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் வனக்கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:30 AM IST (Updated: 22 Dec 2018 10:02 PM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்கள் பாரம்பரிய உணவு பயிர்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்று வனக்கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


ஆனைமலை, 

ஆனைமலையை அடுத்த சேத்துமடை அருகே உள்ள பழைய சர்க்கார்பதியில் மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான உபதொழில்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களுக்கு பாரம்பரிய பயிர்கள் பயிரிடுவது, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவது, சாகுபடி செய்யும் பயிர்களை சந்தைப்படுத்துவது, உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பழைய சர்க்கார்பதியில் மலைவாழ் மக்கள் பயிரிட்ட தானிய கீரையை வனத்துறையினர் மற்றும் வனக்கல்லூரியினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சுரேஷ், பேராசிரியர் குமரன், உதவி பேராசிரியர் தேவானந்த், வனவர் சரண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலைவாழ் மக்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள வனத்துறையினருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முதல்கட்டமாக இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தானிய கீரை சாகுபடி குறித்து சமீபத்தில் விளக்கினோம்.

எங்கள் கல்லூரி பேராசிரியர்களின் தொடர் வழிகாட்டுதலின் பேரில் தற்போது தானிய கீரை அறுவடை நிலைக்கு வந்துள்ளது. இந்த தானியக்கீரை முழுக்க முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தானிய கீரை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ் மக்கள் மட்டுமே பயிரிட்டு வந்தனர். கால மாற்றத்தால் தற்போது மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு முறைகளில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும் என்றும், மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு பயிர்களை தாங்களே பயிரிட ஆர்வமுடன் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.


ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், பழைய சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் 37 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் பயன்படுத்தி வந்தனர். அதனை மீட்டு வன உரிமைச்சட்டத்தின் கீழ் மலைவாழ் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள சுயமாக விவசாயம் செய்து கொள்ள வழி வகை செய்யப்பட்டது.

இங்கு தற்போது வாழை, தென்னை, கீரை வகைகள் உள்ளிட்டவற்றை மலைவாழ் மக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது மண் புழு உரம் தயாரிக்கவும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story