கலெக்டர் உத்தரவை மீறி கடன் வசூல்: நிதி நிறுவனங்களை கண்டித்து பெண்கள் உண்ணாவிரதம்


கலெக்டர் உத்தரவை மீறி கடன் வசூல்: நிதி நிறுவனங்களை கண்டித்து பெண்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 Dec 2018 3:45 AM IST (Updated: 22 Dec 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் உத்தரவை மீறி தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூல் செய்வதை கண்டித்து பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்,

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த வங்கிகள் மூலம் கடன் கொடுப்பது குறைந்துள்ளது. இந்த நிலையில் நுண்கடன் தனியார் நிதி நிறுவனங்கள் கிராமங்களில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு கிராமத்திலும் பல பெண்கள் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கஜா புயல் தாக்கியதால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விவசாயம் முடங்கியது. இதனால் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழு பெண்கள், தாங்கள் பெற்ற கடனுக்கு மாத தவணை செலுத்த காலக்கெடு வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கணேசிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் கணேஷ், சுயஉதவிக்குழு பெண்கள் வாங்கிய கடனுக்கான தவணைகளை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவதாக உத்தரவிட்டார். ஆனால், தனியார் நிதி நிறுவன பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கடன் தொகை வசூலுக்காக கிராமங்களுக்கு வந்து செல்கின்றனர். இது தொடர்பாக கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்று பெண்கள் கூறினால், உத்தரவு நகலை அவர்கள் கேட்கின்றனர்.

இந்நிலையில் கலெக்டர் உத்தரவை நடைமுறைப்படுத்த கோரியும், கலெக்டர் உத்தரவை மீறி தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூல் செய்வதை கண்டித்தும், கீரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், கலெக்டர் 6 மாத காலம் அவகாசம் கொடுத்து இருக்கிறார் என வசூலுக்கு வருபவர்களிடம் கூறினால், பணம் கொடுத்தது நாங்கள்தான், அதனால் வசூல் செய்வது குறித்தும், அவகாசம் கொடுப்பது குறித்தும் முடிவெடுப்பது நாங்கள்தான். பணம் கட்டவில்லை என்றால் ஆதார் எண்ணை துண்டிப்போம். வங்கி கணக்கை முடக்குவோம் என்று மிரட்டுகிறார்கள். இந்த போராட்டத்திற்கு பிறகும், அவர்கள் வசூலுக்கு வந்து மிரட்டினால் மாவட்ட அளவில் போராட்டம் நடத்துவோம், என்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் கலந்து கொண்டு பேசுகையில், புயலால் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்யாமல், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில், கடன்தொகையை கட்ட ஒரு ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும். இது குறித்து சட்டமன்றத்தில் பேசுவேன், என்றார்.

Next Story