அனைத்து வங்கிகளிலும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


அனைத்து வங்கிகளிலும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:15 AM IST (Updated: 22 Dec 2018 10:43 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து வங்கிகளிலும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் மற்றும் நிறுவன தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் தோப்பையகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நசீர்அகமது வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் வண்ணப்பா, சுந்தரேசன், அசோக்குமார், ராஜா, ராஜேந்திரன் ஜெயபால், வேலு, வரதராஜ், நர்சரி சங்கம் கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர், நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் வடமாநில விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியாக, நபர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் செய்துள்ளதை வரவேற்கிறோம். இதே போல அனைத்து வங்கிகளிலும் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, மீண்டும் இரு மடங்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த ஊராட்சிகளிலேயே தங்கி பணிபுரிய வேண்டும். அரசு கட்டி தந்த அலுவலகங்களில் பணிபுரியாத கிராமநிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணி செய்வதால், ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்ட மின்சார வாரியத்திற்கு உடனடியாக 10 ஆயிரம் மின்கம்பங்கள் வழங்கி, விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி அணையின் பாசன கால்வாய் அகலப்படுத்தி, உயர்த்தி அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி கடன் முழுவதும் தள்ளபடி செய்ய வேண்டும். விளைநிலங்கள் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லி கிரஷர்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூருவில் இருந்து காவிரியில் கலக்கும் அர்காவதி நதியை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வழியாக தர்மபுரி மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராமப்பா, முனியப்பன், குப்பையன், சத்தியமூர்த்தி, தேவராஜ், கண்ணப்பன், கதிர்யப்பன், துரைச்செல்வம், முத்து, கோவிந்தராஜ் கணேசன், முருகேசன், அனுமந்தராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Next Story