அறந்தாங்கி அருகே 5 தலைமுறைகள் கண்ட மூதாட்டி மரணம் குடும்ப உறுப்பினர்கள் 420 பேர் அஞ்சலி


அறந்தாங்கி அருகே 5 தலைமுறைகள் கண்ட மூதாட்டி மரணம் குடும்ப உறுப்பினர்கள் 420 பேர் அஞ்சலி
x
தினத்தந்தி 23 Dec 2018 4:15 AM IST (Updated: 22 Dec 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி அருகே 5 தலைமுறைகளை கண்ட மூதாட்டி இறந்தார். அவருடைய உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் 420 பேர் அஞ்சலி செலுத்தினர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்னசுனையங்காட்டை சேர்ந்தவர் அருணாசலம். விவசாயி. இவருடைய மனைவி நல்லம்மாள் (வயது 118). இத்தம்பதிக்கு தங்கையா, தவப்பிரகாசம் என 2 மகன்கள் மற்றும் ஜானகி, காந்திமதி, அம்பிகாவதி, பத்மாவதி, கோமதி, கலைமதி என 6 மகள்கள். அருணாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து சின்னசுனையங் காட்டில் உள்ள தவப்பிரகாசம் வீட்டில் நல்லம்மாள் வசித்து வந்தார். உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அவர், அவருடைய வேலைகளை அவரே செய்து வந்தார். இந்நிலையில் நல்லம்மாள் கடந்த வியாழக்கிழமை இறந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் உறவினர்கள், கிராம மக்கள் நல்லம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் அங்குள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப் பட்டது. 5 தலைமுறைகளை கண்ட நல்லம்மாளுக்கு 27 பேரன், பேத்திகளும், 40 கொள்ளுப் பேரன், பேத்திகளும், 22 எள்ளுப்பேரன், பேத்திகளும் உள்ளனர்.

இதுகுறித்து நல்லம் மாளின் மகள் வழி பேரன் குணசீலன் கூறுகையில், எங்கள் பாட்டிக்கு 118 வயது ஆகிறது. அவர், எங்கள் தாத்தாவை திருமணம் செய்ததையடுத்து சின்னசுனையங்காட்டில் வசித்து வந்தார். எங்கள் தாத்தா-பாட்டிக்கு திருமணமாகி 10 வருடங்களாக குழந்தைகள் இல்லை. பின்னர் முதல் குழந்தையாக எங்கள் மாமா தங்கையா பிறந்தார். அதைத்தொடர்ந்து 7 குழந்தைகளை எங்கள் பாட்டி பெற்றெடுத்தார். இதில் தற்போது 3 பேர் இறந்து விட்டனர்.

தற்போது எங்கள் பாட்டியின் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் என எங்களுடைய குடும்பத்தில் மொத்தம் 420 உறுப்பினர்கள் உள்ளோம். சின்ன சுனையங்காட்டில் உள்ள ஏராளமானவர்கள் எங்களின் உறவினர்கள் தான். இயற்கையான முறையில் விவசாயம் செய்த காய்கறிகளை சாப்பிட்டதால், எங்கள் பாட்டி ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு இறக்கும் வரை கண்பார்வையும், காது கேட்கும் திறனும் நன்றாக இருந்தது. அவர் அருகில் உள்ள பேரன், கொள்ளுப்பேரன் வீடுகளுக்கு வாரத்தில் ஒரு நாள் நடந்தே சென்று வருவார். கடந்த புதன்கிழமை இரவு உறவினர்களிடம் பேசிவிட்டு படுக்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது, அவர் இறந்துவிட்டார். அவருடைய உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்தோம், என்றார்.

Next Story