கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு 2 பேர் அதிரடி நீக்கம்
கர்நாடக மந்திரிசபை முதல் முறையாக, நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரசை சேர்ந்த 2 பேர் மந்திரி சபையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். 8 பேர் மந்திரிகளாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்து 7 மாதங்கள் ஆகிறது.
எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி
முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் உள்ளனர். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 2 இடங்களும் என மொத்தமாக 8 இடங்கள் காலியாக இருந்தது. மந்திரி பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். அதே நேரத்தில் காங்கிரசில் உள்ள 6 இடங்களுக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் இடைத்தேர்தல், சட்டசபை கூட்டத்தொடர் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி மந்திரிசபை விரிவாக்கம் செய்வதை கூட்டணி கட்சி தலைவர்கள் தள்ளிப்போட்டு வந்தனர்.
இதன் காரணமாக மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவ்வாறு அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாகவும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். அதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தார்கள். இதற்கு முதல்-மந்திரி குமாரசாமியும் சம்மதம் தெரிவித்தார்.
2 பேர் அதிரடி நீக்கம்
இதையடுத்து, சமீபத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 22-ந் தேதி (அதாவது நேற்று) மந்திரிசபை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சம்மதம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் டெல்லியில் ராகுல்காந்தியை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி, சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கரை நீக்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு ராகுல்காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் சங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மந்திரி சபையில் காலியாக இருந்த இடம் 6-ல் இருந்து 8 ஆக உயர்ந்தது. அந்த 8 மந்திரி பதவிகளையும் ஒரே நேரத்தில் நிரப்ப காங்கிரஸ் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டது. அந்த 8 மந்திரிகளின் பெயர் பட்டியலும் ராகுல்காந்தியிடம் வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதாவது எம்.பி.பட்டீல், திம்மாப்பூர், சதீஸ் ஜார்கிகோளி, சி.எஸ்.சிவள்ளி, பரமேஸ்வர் நாயக், துக்காராம், ரஹிம்கான், எம்.டி.பி. நாகராஜ் ஆகிய 8 பேரும் புதிய மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.
கவர்னர் அனுமதி
இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்வது குறித்தும், புதிய மந்திரிகள் பதவி ஏற்பது குறித்தும் நேற்று காலையில் கவர்னர் மாளிகையில், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது புதிதாக பதவி ஏற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியலையும் கவர்னரிடம், குமாரசாமி வழங்கினார். அதைத்தொடர்ந்து, மந்திரிசபை விரிவாக்கத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலாவும் அனுமதி வழங்கினார். அதையடுத்து மாலை 5.20 மணிக்கு புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய மந்திரிகள் பதவி ஏற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கவர்னர் மாளிகையில் செய்யப்பட்டன.
இதையடுத்து, புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா நேற்று மாலையில் கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்றது. மாலை 5.20 மணியளவில் கவர்னர் வஜூபாய் வாலா வருகை தந்தார். அவரை முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
8 மந்திரிகள் பதவி ஏற்பு
அதன்பிறகு, புதிய மந்திரிகள் 8 பேரும் ஒவ்வொருவராக பதவி ஏற்றுக் கொண்டனர். அதாவது எம்.பி.பட்டீல், திம்மாப்பூர், சதீஸ் ஜார்கிகோளி, சி.எஸ்.சிவள்ளி, பரமேஸ்வர் நாயக், துக்காராம், ரஹிம்கான், எம்.டி.பி.நாகராஜ் ஆகிய 8 பேரும் தனித்தனியாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகள் 8 பேருக்கும் கவர்னர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் ரஹிம்கான் மட்டும் ஆங்கிலத்தில் பேசி பதவி ஏற்றுக்கொண்டார். மற்ற 7 பேரும் கன்னடத்தில் பேசி பதவி ஏற்றார்கள்.
புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட 8 மந்திரிகளுக்கும் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் மந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2 இடங்கள் காலி
கர்நாடகத்தில் 32 பேர் கொண்ட மந்திரிசபையில் 30 மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மந்திரிசபையில் இன்னும் 2 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் வசம் உள்ள அனைத்து மந்திரி பதவிகளும் நிரப்பப்பட்டுள்ளன. ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வசம் 2 இடங்கள் உள்ளன. அந்த 2 இடங்களையும் நிரப்ப ஜனதாதளம்(எஸ்) தயாராக இருக்கிறது.
ஆனால் தற்போது கன்னடத்தில் தனூர் (மார்கழி) மாதம் நடக்கிறது. இந்த மாதத்தில் கன்னடர்கள் எந்த சுபகாரியமும் நடத்தமாட்டார்கள். இதனால், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 2 மந்திரி பதவிகளும் நிரப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனூர் மாதம் முடிந்த பின்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 2 மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆதரவாளர்கள் போராட்டம்
மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story