விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை
விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வி.மருதூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடிந்த பின்னர், பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதனருகே சில்லரைகள் மட்டும் கிடந்தன. ஆனால் ரூபாய் நோட்டுகள் இல்லை. இதன் மூலம் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்ம மனிதர்கள், அதில் இருந்த சில்லரையை மட்டும் போட்டுவிட்டு, ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். கோவிலில் திருட்டு நடந்தால், அபாயஒலி எழுப்பும் வகையில் அங்கு கருவி ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. இதை பற்றி முன்கூட்டியே தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள், அபாய ஒலி எழுப்பும் கருவிக்கு செல்லும் மின்ஒயர் களை துண்டித்து, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு தான் பூஜை செய்து மாலை அணிந்து கொள்வார்கள். இதனால் தற்போது அய்யப்ப பக்தர்கள் மூலம் அதிகளவில் காணிக்கை வசூலாகி இருந்திருக்கும். அதோடு உண்டியல் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது என்பதால் ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணம் இருந்திருக்கும். இதையெல்லாம் அறிந்து தான், மர்ம மனிதர்கள் இந்த கோவிலை குறிவைத்து இந்த செயலை அரங்கேற்றி இருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story