திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 23 Dec 2018 3:15 AM IST (Updated: 23 Dec 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கயத்தாறு, 

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசனுக்கு விசுவரூபம் படத்தை வெளியிடுவதில் பிரச்சினை ஏற்பட்டபோது, நாட்டை விட்டு வெளியேற போவதாக அறிவித்தார். அவருக்கு தமிழக அரசு உதவி செய்து, பிரச்சினைகளை தீர்த்து வைத்தது. விசுவரூப படத்தை வெளியிடச் செய்து, நடிகர் கமல்ஹாசனை நாட்டை விட்டு வெளியேறாமல் காத்தது தமிழக அரசு.

அவர் தற்போது அரசியலில் நுழைந்து விட்டு, மன அழுத்தத்தில் உள்ளார். அதனை அவர் சரி செய்தால், அவருக்கு நல்லது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு குடும்பம் மட்டுமே திரைப்படத்துறை முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. யார் வேண்டும் என்றாலும் புதிய திரைப்படம் தயாரித்து, வெளியிடலாம் என்ற வெளிப்படைத் தன்மை உள்ளது.

கணக்குகள் ஆய்வு

அரசு அதிகாரிகளை பணி செய்ய வைப்பது அரசின் கடமை. ஆனால் யாருக்கும் அழுத்தம் கொடுப்பது கிடையாது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக நடிகர் விஷால் நடுநிலையாளர்களை வைத்து, பிரச்சினையை பேசி தீர்த்து இருக்கலாம். இது அரசாங்கத்துக்கும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை கிடையாது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. அதனை சட்டப்படி ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை. அதனை அரசு செய்யும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Next Story