உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: எருமை மாடுகளிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்


உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: எருமை மாடுகளிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2018 5:00 AM IST (Updated: 23 Dec 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் எருமை மாடுகளிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

ஈரோடு, 

ஈரோடு அருகே உள்ள மூலக்கரையில் கடந்த 17-ந் தேதி முதல் உயர் அழுத்த மின்கோபுரங்களுக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்சாரத்தை புதை வட கேபிள்களாக சாலை ஓரங்கள் வழியாக கொண்டு செல்ல கோரியும், கோபுரங்கள் போடப்பட்ட விவசாய நிலங்கள், மின்பாதையில் இருக்கும் விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை மற்றும் வாடகைத்தொகை வழங்க கோரியும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 6-வது நாளாக போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கவின்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, வி.பி.குணசேகரன், எம்.எம்.பழனிச்சாமி, கே.கே.துரைசாமி, செந்தாமரை கண்ணன், ராசு, ஏ.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேற்று விவசாயிகள் எருமை மாடுகளிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினார்கள். இதற்காக எருமை மாடுகள் மற்றும் எருமை கன்றுக்குட்டிகளை விவசாயிகள் சிலர் கொண்டு வந்தனர். போராட்ட பந்தலுக்கு அருகே அந்த எருமை மாடுகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அப்போது அங்கு இருந்த விவசாயிகள் ஆண்களும், பெண்களும் தங்கள் கைகளில் இருந்த மனுக்களை எருமை மாடுகளின் வாயின் அருகே நீட்டினார்கள்.

உயர் அழுத்த மின்கோபுரம் தொடர்பாக விவசாயிகள் அரசுக்கு வழங்கிய மனுக்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதை உணர்த்தும் வகையில் எருமை மாடுகளிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்துவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சற்று நேரம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

நேற்று ஏராளமான பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெண்களான கிருஷ்ணவேணி, ரோஜா, தமிழரசி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இரவு நேரத்திலும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பந்தலிலேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story