திருச்சி அரசு மருத்துவமனையில் விஷ ஊசி போட்டு பயிற்சி டாக்டர் தற்கொலை போலீசார் விசாரணை


திருச்சி அரசு மருத்துவமனையில் விஷ ஊசி போட்டு பயிற்சி டாக்டர் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Dec 2018 5:30 AM IST (Updated: 23 Dec 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனையில், விஷ ஊசி போட்டு பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி காட்டூர் விக்னேஷ்நகரை சேர்ந்தவர் மோகன். இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகன் சுதர்சன் (வயது 24). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனையில் எம்.எஸ்.1 வார்டில் பணியில் இருந்த சுதர்சன் அங்குள்ள கழிவறைக்கு சென்றார். அதன்பிறகு நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. நள்ளிரவு நேரம் என்பதால் டாக்டரை யாரும் தேடவில்லை.

இந்தநிலையில் அதிகாலையில் அங்குள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் ஒருவர் சென்றார். அங்கு டாக்டர் சுதர்சன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவர் அருகே ஒரு மருந்து பாட்டிலும், கழிவறைக்குள் ஊசியும் கீழே கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர் ஓடி சென்று இது குறித்து மற்ற டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். பின்னர் சுதர்சனை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சுதர்சன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள்.

முதற்கட்ட விசாரணையில் அவர் ‘கேட்டமைன்‘ என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் தனது உடலில் செலுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். பொதுவாக அறுவை சிகிச்சையின்போது, நோயாளிகளுக்கு மயக்கத்துக்காக குறிப்பிட்ட அந்த மருந்தை சிறிதளவு கொடுப்பது வழக்கம். ஆனால் அந்த மருந்தை அளவுக்கு அதிகமாக செலுத்தி கொண்டால் விஷத்தன்மையுடன் இறப்பு நேரிடக்கூடும். ஆனால் அவர் ஏன்? அந்த மருந்தை ஊசி மூலம் அதிகமாக செலுத்தி கொண்டார். அவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தாரா? அல்லது காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story