கோவை கோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணிக்கு 5 ஆயிரம் பேர் திரண்டனர் 10-ம் வகுப்பு தகுதிக்கு எம்.பில். முடித்தவர்களும் வந்தனர்
கோவை கோர்ட்டில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணலுக்கு 5 ஆயிரம் பேர் திரண்டனர். 10-ம் வகுப்பு தகுதிக்குரிய பணிக்கு எம்.பில். முடித்தவர்களும் வந்திருந்தனர்.
கோவை,
கோவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றுவதற்கு 33 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 16 இரவுக் காவலர்கள், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் ஆகிய காலிப் பணி யிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்த பின்னர் அலுவலக உதவியாளர் பணிக்கு 9,827 பேரும், இரவுக் காவலர்கள், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் ஆகிய வேலைக்கு 1,706 பேரும் நேர்காணலுக்கு உரியவர்களாக கண்டறியப்பட்டு அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆனால் 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இரவுக் காவலர்கள், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் ஆகிய வேலைக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 30 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 32 வயது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35 என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு நேற்று அழைக்கப்பட்டனர். இதில் கலந்து கொள்வதற்காக ஆண்களும், பெண்களும் காலை 6 மணிக்கே கோர்ட்டு வளாகம் முன்பு திரண்டனர். இதனால் கோர்ட்டுக்கு செல்லும் அனைத்து நுழைவு வாயில்களிலும் கோர்ட்டு பணியாளர்கள் மற்றும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள், நேர்காணல் அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மற்றும் நீதிமன்ற வலைதளத்தில் இடம் பெற்ற தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே காலை 8 மணி முதல் உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் கோர்ட்டு நுழைவு வாயிலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அழைப்பு கடிதத்தில் இருந்த வரிசை எண்ணின்படி கோர்ட்டு வளாகத்தில் 15 அறைகளில் நேர்காணல் நடந்தது. ஒரு நேர் காணலில் 2 நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர். நேர்காணல் காலை 10 மணிக்கு தொடங்கியது. நேர்காணலுக்கு வந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கல்வித்தகுதி பதிவு செய்யப் பட்டது.
அதன்பின்னர் அவர்களின் குடும்ப பின்னணி என்ன?, தற்போது என்ன வேலை பார்க்கிறார்கள்? தாய் -தந்தை என்ன வேலை பார்க்கிறார்கள்?, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டத் தெரி யுமா? என்பன போன்ற கேள்விகளை கேட்டதாக நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் கூறினார்கள். அவர்களின் பேச்சு, நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.
நேர்காணலில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்திருந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அலுவலக உதவியாளர் வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு. இதில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியதில்லை. ஆனால் நேற்று நேர்காணலுக்கு வந்தவர்களில் 80 சதவீதம் பேர் டிப்ளமோ, ஐ.டி.ஐ., கலை, அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகள், எம்.ஏ. எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற பட்டமேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் எம்.பில். கல்வி தகுதி உடையவர்கள் ஆவர். ஒவ்வொருவருக்கும் 5 முதல் 10 நிமிடம் வரை நேர்காணல் நடந்தது.
நேர்காணலுக்கு வந்த சிலர் கூறுகையில், அலுவலக உதவியாளர் பணிக்கு அதிக கல்வி தகுதி உடைய பலர் வந்திருந்ததை பார்க்கும் போது வேலையில்லா திண்டாட்டத்தின் தீவிரத்தை உணர முடிந்தது. தனியார் நிறுவனங்களில் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் தான் சம்பளம் கிடைக்கும். ஆனால் இந்த வேலையில் சேர்ந்த உடனேயே குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அரசு வேலை நிரந்தர வேலை என்பதால் நாங்கள் இந்த நேர்காணலுக்கு வந்தோம் என்றனர்.
இது குறித்து கோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அலுவலக உதவியாளர் பணிக்கு முதலில் அழைக்கப்பட்ட 5 ஆயிரம் பேரில் எத்தனை பேர் நேர்காணலுக்கு வந்தார்கள் என்ற விவரம் உடனே தெரியவில்லை. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீதி உள்ளவர் களும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 2 நாட்கள் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டவர் களில் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கான 2-ம் கட்ட நேர்காணல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விவரம் அன்றே அறிவிக்கப்படும்.
அடுத்த கட்டமாக இரவுக் காவலர்கள், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர் ஆகிய வேலைகளுக்கு நேர்காணல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அதன் முடிவு அன்றே வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story