பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சோதனை: போக்குவரத்து விதிமீறிய 33 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு ரூ.83 ஆயிரம் அபராதம் வசூல்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய சோதனையில் விதி மீறிய 33 ஆம்னி பஸ்கள் உள்பட 38 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.83 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
வேலூர்,
கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி வெளியூரில் வசிப்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனைச் செய்தனர்.
வேலூர் சரக போக்குவரத்துத் துணை ஆணையர் சுரேஷ் மேற்பார்வையில் வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கட்ராகவன், விஜயகுமார் ஆகியோர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று அதிகாலை வரை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா, பெர்மிட் உள்ளதா? என்றும், கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களில் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, அதிக பாரம் ஏற்றப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
இந்தச் சோதனையில் போக்குவரத்து விதி மீறிய 33 ஆம்னி பஸ்கள் உள்பட 38 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.83 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது. மேலும் 2 ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ.61 ஆயிரத்து 500 வரி வசூலிக்கப்பட்டது என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story