உடுமலை வனச்சரகத்தில் தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரம்
உடுமலை வனச்சரகத்தில் தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தளி,
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையே அதிகமாக நம்பி உள்ளது. வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு வனப்பகுதியில் உள்ள ஓடைகளை தடுத்து தடுப்பணைகள் வனத்துறையினர் சார்பில் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் வனவிலங்குகளின் வழித்தடங்களை மையமாக கொண்டு ஆழ்குழாய் அமைத்து ஆங்காங்கே தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் கோடைகாலங்களில் வனத்துறையினர் லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதனால் வனவிலங்குகள் தடுப்பணைகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்துவிட்டு வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்று விடுகின்றன. இதன் காரணமாக சமீபகாலமாக வனவிலங்குகள் சமவெளிப் பகுதிக்கு வருவது பெருமளவிற்கு தடுக்கப்பட்டது.
தடுப்பணைகள்
இந்த நிலையில் வருகின்ற கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு ஓடைகளை தடுத்து தடுப்பணைகள் கட்டுவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து கோம்பை மேற்கு பீட் மற்றும் ஏழுமலையான் கோவில் பிரிவு அருகே தலா ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பணைகள் கட்டப்படுவதால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story