பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடிமங்கலம் பகுதி கிராமங்களில் தேவராட்டம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடிமங்கலம் பகுதி கிராமங்களில் தேவராட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:15 AM IST (Updated: 23 Dec 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடிமங்கலம் பகுதி கிராமங்களில் தேவராட்டம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

குடிமங்கலம்,

வீரமும், விளையாட்டும் தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்து விட்ட ஒன்று. நடனமும், நாட்டியமும், கூத்தும் தமிழர்களின் அன்றாட வாழ்வில் அங்கம்வகிப்பவை ஆகும். தொலைக்காட்சி, சினிமாக்களும் ஆதிக்கம் செலுத்தாத காலங்களில் தெரு கூத்துகள், நாட்டிய நாடகங்கள் மக்களுக்கு பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி பாரம்பரியத்தையும், சாதனையாளர்களின் சரித்திரத்தையும், புராணங்களையும் கொண்டு சேர்க்கும் களமாக அமைந்தன.

அந்த வகையில் பொம்மலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம், கும்மி, மயிலாட்டம், ஓயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், தெருக்கூத்து, உருமியாட்டம் என ஏராளமான ஆடல், பாடல் கலைகள் காலமாற்றத்தால் கரைந்து போய் விடுகிறது. குடிமங்கலம் பகுதியில் இன்றளவும் அந்த கலைகள் நடந்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

உற்சாகம்

மார்கழி மாதம் பிறந்து விட்டாலே இந்த பகுதி மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் தைப்பொங்கலை வரவேற்க தயாராகி விடுவார்கள். மார்கழி மாதத்தின் இரவு நேரங்களில் ஊரின் நடுவில் உள்ள திறந்த வெளியில் ஒலிக்கும் உருமி இசை அனைவரையும் மகிழ்ச்சியான மன நிலைக்கு கொண்டு வருகிறது. கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் அங்கே கூடிவிடுகிறார்கள்.

இளைஞர்கள் உருமி இசைக்கு ஏற்ப சலங்கைகளை ஒலிக்க வைத்து தாளசுதியுடன் தேவராட்டம் ஆடத்தொடங்குகிறார்கள். அவர்களுடன் சிறுவர்களும், பெரியவர்களும் கலந்துகொள்ளும் போது அங்கே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. தேவராட்டத்தின் போது இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு அடவுகளும் மனிதனின் செயல்பாடுகளை உணர்த்தும் விதமாக உள்ளது. மேலும் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் தேவராட்டம் உள்ளது. இரவு நேரங்களில் பனிப்பொழிவையும் மறந்து கிராம மக்கள் ஆடுவது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்

குடிமங்கலம் அருகே உள்ள சோமவாரப்பட்டி, கொங்கல் நகர், லிங்கம்மாவூர் உள்ளிட்ட கிராமங்களில் தேவராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செல்போன்களின் வரவால் உலகம் உள்ளங்கையில் வந்து விட்டதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், என மயங்கி கிடக்கும் இளைஞர்கள் மத்தியில் வீர விளையாட்டுக்கும், இசை நடனங்களுக்கும் இன்றளவும் முக்கியத்துவம் தருவது தமிழர்களின் பண்பாடும், கலைகளும் இன்றளவும் நிலைத்து நிற்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

Next Story