மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் நீக்கப்பட்ட காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் சங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் சங்கர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
2 பேர் அதிரடி நீக்கம்
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நேற்று மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 8 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதே நேரத்தில் மந்திரி சபையில் இருந்து பெலகாவியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.
காரணம் என்ன?
அவர்கள் இருவரும் மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்டதற்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரமேஷ் ஜார்கிகோளி கூட்டணி ஆட்சி மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் மந்திரிசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். அத்துடன் அவர் பா.ஜனதா கட்சியில் சேரப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் மந்திரி டி.கே.சிவக்குமார் அளித்த விருந்தை புறக்கணித்துவிட்டு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா அளித்த விருந்தில் ரமேஷ் ஜார்கிகோளி கலந்துகொண்டார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற காரணங்களால் மந்திரி பதவியில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளிக்கு பதிலாக, அவரது சகோதரர் சதீஸ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெலகாவி காங்கிரசில் ஏற்படும் பின்னடைவை சரி செய்து விடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சரியாக செயல்படாததால்...
அதுபோல, மந்திரி பதவியில் இருந்து ஜெயமாலாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆதரவு தெரிவித்தார்.
அதே நேரத்தில் மந்திரிசபையில் ஒரு பெண் மந்திரி மட்டுமே இருப்பதால், ஜெயமாலாவை நீக்குவதற்கு பதிலாக சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கரிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் மந்திரி பதவியில் இருந்து கொண்டு அவர் சரியாக செயல்படாத காரணத்தால் நீக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story