உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காமல் போகிறது செ.கு.தமிழரசன் பேட்டி


உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காமல் போகிறது செ.கு.தமிழரசன் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2018 4:00 AM IST (Updated: 23 Dec 2018 7:55 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போகிறது என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

அம்பேத்கரின் 62–வது நினைவு நாளை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்பு நாளாக இந்திய குடியரசு கட்சி கடைபிடிக்கும்விதமாக கட்சியின் மாநாடு ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற்றது. இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அனந்தலை.தங்கராஜ் தலைமை தாங்கினார். வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார், மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாவட்ட பொருளாளர் ராஜாராம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் தன்ராஜ் வரவேற்றார்.

இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செ.கு.தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 62 பேருக்கு அம்பேத்கர் அருந்தொண்டர் விருதினை வழங்கி பேசியதாவது:–

அம்பேத்கர் இன்னமும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இந்தியாவின் முதல் தலித் பிரதமராக இருந்திருப்பார். உலகில் உள்ள சிலைகளில் புத்தர் சிலை அதிக உயரமாக இருந்தது. அதைவிட உயரமான சிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி வைத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் தலித் மக்களுக்காக தமிழக அரசு எதையும் செய்யவில்லை. அம்பேத்கர் வாங்கி கொடுத்த உரிமைகள் பறிபோகிறது. வேலூர் மாவட்டம் அனைத்து சாதி மக்களின் சமூக நல்லிணக்கத்தை பேணுகின்ற மாவட்டமாகும். இதற்கு குந்தகம் வராத வகையில் அரசும், சட்டமும் செயல்பட வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து நேற்று செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை கடந்த காலங்களில் இருந்தது போல் 40 ஆக உயர்த்த வேண்டும். மக்கள்தொகை குறைந்ததை காரணம் காட்டி நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆக குறைக்கப்பட்டது. தற்போது மக்கள்தொகை கூடியிருப்பதால் அதை 40 ஆக உயர்த்த வேண்டும்.

அப்படி உயர்த்தப்பட்டால் தலித் மக்களுக்காக இருக்கிற தனித்தொகுதிகளின் எண்ணிக்கை 7–ல் இருந்து 8 ஆக மாறும். இதன்மூலம் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்பட தலித் மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் தலித் மக்களுக்கு தனித்தொகுதி ஒன்று கூடுதலாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இதை மத்திய, மாநில அரசுகள் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலேயே அமல்படுத்த வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 ஆக உயர்த்த வேண்டும்.

நாடெங்கிலும் உள்ள அம்பேத்கர் சிலைகளை சுற்றி உள்ள கம்பி வலைகளை அகற்ற வேண்டும், சாலை விரிவாக்கத்தின்போது அம்பேத்கர் சிலைகள் அகற்றப்பட்டால் அதை மீண்டும் வேறு ஒரு இடத்தில் மையப்பகுதியிலேயே அமைக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் சிலைகள் வெண்கல சிலைகளாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டவிதிகளை காரணம் காட்டி சிலைகள் வைக்க தடைவிதிக்க கூடாது. புதிய விதிகள் புதிய சிலைகளை வைப்பதற்கு மட்டும்தான் பழைய சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைக்கும்போது புதிய விதிகளை காரணம் காட்டக்கூடாது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி அரசியல்கட்சிகள் நீதிமன்றத்திற்கு செல்கின்றன. இதனால் நீதிமன்றத்தை காரணம் காட்டி ஆளும் கட்சி உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் தள்ளி வைத்துக்கொண்டே இருக்கிறது.

இதனால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போகிறது. இதனால் கிராமப்புற மக்கள் போதுமான அடிப்படை வசதியின்றி அவதிப்படுகிற சூழ்நிலை இருக்கிறது.

எந்த ஒரு தலித் அமைப்பும் தங்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லை என கூறி நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. ஆனால் அரசியல்கட்சிகள் தலித் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்திக்கொண்டு நீதிமன்றத்தை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்துக்கொண்டு வருகின்றன. இடஒதுக்கீடு முறைக்கு எதிராக செயல்படுகின்ற, சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திற வகையில் செயல்படும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில பொருளாளர் நாகராஜன், மாநில துணைத்தலைவர் முருகன், மாநில இளைஞர் அணி செயலாளர் கவுரிசங்கர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மங்காபிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் சிற்பி சிவா, மாநில தொழிற்சங்க செயலாளர் இருதயநாதன், நிர்வாகிகள் மலைராஜன், மூர்த்தி, ராணிப்பேட்டை நகரத்தை சேர்ந்த நிர்வாகிகள் ரத்தினம், ரகு, ரூபன், இளங்கோவன், ஜெயவேல், திருநாவுக்கரசு உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை முன்னிட்டு இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.


Next Story