ஜனவரி 1-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் உணவு வணிகர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்


ஜனவரி 1-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் உணவு வணிகர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:30 AM IST (Updated: 23 Dec 2018 10:15 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட உணவு வணிகர்கள் தங்களது உரிமம்- பதிவை மேற்கொள்ள வருகிற 1-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அரியலூர், 


அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட உணவு வணிகர்கள் மேற்கொள்ளும் உணவு வணிகத்திற்கு உரிமம் மற்றும் பதிவு மேற்கொள்ள அரசுக்கு செலுத்தப்படும் கட்டணத்தொகையானது கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி சலான் மூலம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைவரும் இ-பேமெண்ட் ஆன்லைன் மூலமாகவே கட்டணம் செலுத்தி புதியதாக உரிமம் பெறுவது மற்றும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து உணவு வணிகம் செய்யும் வணிகர்கள் அனைவரும் உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் முறையில்தான் கட்டண தொகை செலுத்த முடியும். இந்த தொகையை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற முறையில் ஆன்லைன் மூலமாக செலுத்தினால் போதுமானது. கருவூல முத்திரையுடன் கூடிய வங்கி சலான் மூலம் கட்டணம் செலுத்தும் முறையானது வரும் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் சலான் மூலம் கட்டண தொகை செலுத்தும் முறை அனுமதிக்கப்படமாட்டாது.

எனவே அனைத்து உணவு வணிகர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே, உரிமம் பெற்றவர்கள் தற்போது புதுப்பிக்கும் காலக்கெடுவானது 30 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என இருந்தது. ஆனால், தற்போது 4 மாதங்களுக்கு முன்பு காலாவதியாகும் நாளில் இருந்து 120 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்காதவர்களுக்கு அபராத தொகையாக நாள் ஒன்றிற்கு ரூ.100 என அபாரத்தொகை கணக்கிட்டு ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

உணவு வணிகர்கள் Food licensing.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று License/Registration என்ற பகுதியில் உள்ளடு செய்து தாங்களாகவே விண்ணப்பித்துக்கொள்ளலாம் அல்லது அரசு இ-பொது சேவை மையம் மற்றும் தனியார் பொது சேவை மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதுகுறித்து சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அரியலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் அல்லது உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story