பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் தொடர் செலவினங்களுக்காக ரூ.6.50 கோடி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் தொடர் செலவினங்களுக்காக ரூ.6.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைந்துள்ள பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் செண்பகராஜா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், தாசில்தார் வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் முன்னாள் மாணவர்கள் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நினைவு தூணை திறந்து வைத்து பேசியதாவது:–
தமிழகத்தில் 2011–ம் ஆண்டு முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் என இதுவரையில் 81 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரிகளில் 1585 புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த பல்வகை தொழில்நுட்ப கல்லூரி தற்போது அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டில் இயங்கிய சுயநிதி பல்வகை தொழில்நுட்ப கல்லூரி 1985–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் 360 இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெற்றுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறும் வகையில் இந்த கல்லூரியை தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த கல்லூரியின் தொடர் செலவினங்களுக்காக ரூ.6 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இந்த கல்லூரியில் ஆய்வக உபகரணங்கள், நூலக புத்தகங்கள் மற்றும் கணினிகள் வாங்குவதற்காக ரூ.50 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தங்களது மலரும் நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.