ஜலகண்டாபுரம் அருகே கர்ப்பிணி மர்ம சாவு: திருமண உதவித்தொகையாக பெற்ற 1 பவுன் தங்க காசு பிரச்சினையா? போலீசார் தீவிர விசாரணை
ஜலகண்டாபுரம் அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவத்திற்கு திருமண உதவித்தொகையாக பெற்ற 1 பவுன் தங்க காசு பிரச்சினையா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜலகண்டாபுரம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் ராஜவேலு (வயது 22). விசைத்தறி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சந்திரன்-சந்தியா தம்பதிகளின் மகள் புவனேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது புவனேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் புவனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராஜவேலு வீட்டினர் புவனேஸ்வரி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்ததும் புவனேஸ்வரியின் தாய் சந்தியா மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு ராஜவேலு வீட்டுக்கு வந்தனர். அங்கு புவனேஸ்வரி உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தனர். அதில் புவனேஸ்வரி சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக ராஜவேலு, சண்முகம் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
புவனேஸ்வரி திருமண உதவித்தொகை பெற விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து கடந்த 19-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு புவனேஸ்வரியின் தாய் சந்தியாவும், ராஜவேலுவின் தந்தை சண்முகமும் சென்று திருமண உதவித்தொகைக்காக வழங்கப்பட்ட ஒரு பவுன் தங்க காசை வாங்கினர்.
அந்த தங்க காசை சந்தியா தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். பின்னர் திருமண உதவித்தொகையாக பெற்ற தங்க காசை வாங்கி வருமாறு ராஜவேலு மனைவி புவனேஸ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் காலை தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று புவனேஸ்வரி அந்த தங்க காசை கேட்டுள்ளார். அப்போது தாய் சந்தியா, அந்த 1 பவுன் தங்க காசுடன் மேலும் நகை சேர்த்து சில நாட்களில் தங்க தங்கிலி செய்து தருகிறேன். அதுவரை பொறுமையாக இரு, என்று மகள் புவனேஸ்வரியிடம் சமாதானம் கூறி அனுப்பினார்.
இதனால் அந்த தங்க காசை வாங்காமல் புவனேஸ்வரி கணவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அன்று மாலையில் தான் புவனேஸ்வரி மர்மமான முறையில் கணவர் வீட்டில் இறந்தார். எனவே தங்க காசு பிரச்சினை புவனேஸ்வரி சாவுக்கு காரணமா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story