தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் பழுதான கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியை பெற சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேவாலய சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதிஉதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு, மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அனைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். இந்த நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story