சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வை 1,053 பேர் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு


சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி.தேர்வை 1,053 பேர் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:45 AM IST (Updated: 24 Dec 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. புள்ளியியல் ஆய்வாளர் தேர்வினை 1,053 பேர் எழுதினர். இதை கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

சேலம், 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு சேலத்தில் நேற்று நடைபெற்றது. தேர்வினை எழுத சென்றவர்கள் பல்வேறு கட்ட சோதனைக்கு பின்னரே அறை உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் ஒன்றான சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு மையத்தினை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான போட்டி தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, பாவடி அரசு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை அரசு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி என 7 தேர்வு மையங்களில் நடந்தது.

இந்த தேர்வு எழுத 2 ஆயிரத்து 260 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வினை 1,053 பேர் மட்டுமே எழுதினர். 1,207 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை 8 வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறை அலுவலர்களும், பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு தேர்வு நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story