பிளஸ்-2 வினாத்தாள் வெளியாகவில்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
பிளஸ்-2 வினாத்தாள் வெளியாகவில்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு கூறினார்.
கோபி,
கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.8 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ,செங்கோட்டையன் இந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த விழாக்களில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், கோபி நகராட்சி முன்னாள் தலைவர் கந்தவேல்முருகன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்காமல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்கூடங்களை சுத்தம் செய்யச்சொல்லி ஆசிரியர்கள் மாணவர்களை வற்புறுத்துவது இல்லை. மாணவர்கள் பள்ளியை சுத்தம் செய்வது நமது வீட்டை நாமே சுத்தம் செய்வதுபோல்தான். ஓசூர் பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியாகவில்லை. அறையின் பூட்டை உடைத்த 2 மாணவர்கள் முன்னதாக பிடிபட்டு விட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1000 பள்ளிகளுக்கு காணொலி காட்சி மூலம் பாடம் நடத்தும் முறை பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கொண்டு வரப்படும். இதற்காக அடுத்தமாதம் இறுதிக்குள் சென்னை அண்ணா நூலகத்தில் ஸ்டூடியோ அமைக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு தினமும் ஒரு பாடம் என ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் பாடம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story