உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாறியது


உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாறியது
x
தினத்தந்தி 23 Dec 2018 10:30 PM GMT (Updated: 23 Dec 2018 7:34 PM GMT)

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக நடந்து வரும் காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாறியது.

ஈரோடு, 

ஈரோடு அருகே உள்ள மூலக்கரையில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. 6 நாட்களாக பல்வேறு வடிவங்களில் இந்த போராட்டம் நடந்தது.

உயர் அழுத்த மின்கோபுர உருவத்தை பாடையாக கட்டி வந்து ஒப்பாரி வைத்து, விளக்குமாறு (துடைப்பம்) வைத்து அடித்து போராட்டம், தலையில் முக்காடு, வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம், எருமை மாடுகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் என்று பல்வேறு நூதன போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் 7-வது நாள் போராட்டம் நேற்று காலையில் தொடங்கியது. அப்போது கடந்த 6 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்த விவசாய குடும்பங்களை சேர்ந்த 6 பெண்களும், 5 ஆண்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்ட பந்தலிலேயே அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.

உண்ணாவிரத போராட்டத்தை ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி தொடங்கி வைத்து பேசினார். உயர் அழுத்த மின்கோபுரம் தொடர்பாக உரிய தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும், ஆண்களும் தெரிவித்தனர்.

உண்ணாவிரத போராட்டம் தொடங்கியதையொட்டி போராட்ட பந்தலின் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்சு மற்றும் டாக்டர் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

காத்திருப்பு போராட்டம் என்று தொடங்கப்பட்டு 6 நாட்களாக எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் பெண்கள் முன்வந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்றைய போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தென்னிந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கண்ணையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன், அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கோமதி ஆகியோர் ஆதரவு அளித்து பேசினார்கள். உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, வி.பி.குணசேகரன், முத்துவிஸ்வநாதன், சென்னிமலை பொன்னுசாமி, கவின் உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.

Next Story