மணலி அருகே ஏரியில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் பலி


மணலி அருகே ஏரியில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 Dec 2018 11:15 PM GMT (Updated: 23 Dec 2018 7:50 PM GMT)

மணலி அருகே ஏரியில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவொற்றியூர்,

மணலி தீயம்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் கார்த்திகேயன்(வயது 17). இவர், சி.பி.சி.எல். பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(27). இவர், தனியார் நிறுவன ஊழியர். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர்.

நேற்று நாகராஜ் மற்றும் அவருடைய மனைவி பானு இருவரும் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் கார்த்திகேயன் மற்றும் நாகராஜ் குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்குன்றம் அருகே ஞாயிறு பகுதியில் உள்ள சூரிய பகவான் கோவிலுக்கு சென்றுவிட்டு மதியம் மணலியை அடுத்த அரியலூர் அருகே உள்ள ஏரிக்கு சென்றனர்.

அங்கு கார்த்திகேயன், நாகராஜ் இருவரும் ஏரியில் இறங்கி குளித்தனர். மற்றவர்கள் ஏரிக்கரையில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திகேயன், நாகராஜ் இருவரும் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கிக்கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள் ஏரியில் மூழ்கிய இருவரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டனர்.

இது குறித்து மணலி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மணலி, செங்குன்றம் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி இருவரது உடல்களையும் மீட்டனர்.

இதையடுத்து மணலி போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story