அரக்கோணத்தில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை திருவண்ணாமலை ஆசிரியர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
அரக்கோணத்தில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்,
திருவண்ணாமலை மாவட்டம் கம்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28), முதுகலை பட்டதாரி ஆசிரியரான இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.
இவர் 12-ம் வகுப்புக்கு பாடம் நடத்தும்போது தவறாக நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் பெற்றோர்களிடம் மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் ராமனுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை நடத்த மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்திக்கு அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிஷாந்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
அப்போது ஆசிரியர் வெங்கடேசன் வகுப்பறையில் எங்களை தொட்டு பேசுகிறார், தவறான, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று மாணவிகள் கூறி உள்ளனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து 18 மாணவிகள் எழுத்துபூர்வமாக நிஷாந்தியிடம் கொடுத்து உள்ளனர்.
இதன் மூலம் ஆசிரியர் வெங்கடேசன், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த தனது விசாரணை அறிக்கையை கலெக்டர் ராமனிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி சமர்ப்பித்தார். அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் வெங்கடேசன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று காவனூர் தோல்ஷாப் அருகே பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியர் வெங்கடேசனை பிடித்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Related Tags :
Next Story