பள்ளிகொண்டா அருகே டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து தொழிலாளி பலி 3 மணி நேரத்துக்கு பிறகு உடல் மீட்பு


பள்ளிகொண்டா அருகே டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து தொழிலாளி பலி 3 மணி நேரத்துக்கு பிறகு உடல் மீட்பு
x
தினத்தந்தி 24 Dec 2018 3:00 AM IST (Updated: 24 Dec 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலை மிகவும் குறுகிய சாலை ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கும். இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு வேப்பூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரவேலு என்பவர் தன் நிலத்தில் பயிர் செய்திருந்த கரும்பை அறுவடை செய்து 3 டன் கரும்பை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் வடப்புதுப்பட்டு சர்க்கரைஆலைக்கு கொண்டு வந்தார்.

குடியாத்தம்- பள்ளிகொண்டா செல்லும் சாலையில் சாவடி அருகே உள்ள வளைவில் டிராக்டர் திரும்பும்போது டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து அங்குள்ள பக்தன் என்பவர் மளிகை கடையின் மீது விழுந்தது. கடையின் முன்புறம் அமர்ந்திருந்த நபர் இந்த விபத்தில் சிக்கியது யாருக்கும் தெரியவில்லை. டிராக்டரில் ஏற்றிச்சென்ற 3 டன் கரும்பு மொத்தமாக கவிழ்ந்ததால் அவர் உடல் மீது கரும்பு மூடிக்கொண்டது.

கரும்பு சாலையில் இருந்ததால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் நின்றது. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சம்பவ இடத்திற்கு வந்து வேறு டிராக்டரில் கரும்பை ஏற்றுவதற்கான பணியில் இருந்தார்.

மாலை 5 மணிக்கு கரும்பு சரிந்த இடத்தில் ஆண் ஒருவர் சிக்கி இருப்பதை பார்த்த தொழிலாளிகள், போலீசாருக்கு தெரிவித்தனர். பதறிபோன போலீசார் அவரை உடனடியாக மீட்டனர். அப்போது அவரது கை, கால்கள் முறிந்த நிலையில் சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது.

விசாரணையில் இறந்தவர் கந்தனேரி கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 38), கூலி தொழிலாளி என்பதும், குடும்பத்துடன் பள்ளிகொண்டாவில் வாடகை வீட்டில் வசித்து வருவதும், அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்தது.

Next Story