நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சங்கரநாராயண சுவாமி கோவில்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் காலை, மாலை நேரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 22-ந் தேதி முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது.
10-ம் திருநாளான நேற்று காலை சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 5 மணிக்கு கோ பூஜையும், 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 8.15 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. 8.50 மணிக்கு திருக்கயிலாய வாத்திய இசையுடன் சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத நடராஜர் சப்பரத்தில் எழுந்தருளி ஆனந்த நடனமாடி ரதவீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குற்றாலம்-வள்ளியூர்
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடந்த 18-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையிலும், 5 மணிக்கு திரிகூட மண்டபத்திலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. பின்னர் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி செல்வகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.
வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி சீதமாமுனீஸ்வரர்-சிவகாமி அம்பாள் கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் 4.30 மணி முதல் திருவெம்பாவை பாடல்கள் பக்தர்களால் பாடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தரிசன பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர்-செப்பறை கோவில்
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவும், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அதிகாலையில் திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பசு தீபாராதனையும், 4 மணிக்கு நடராஜ பெருமானின் திருநடனக்காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு கோ-பூஜையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு நடன தீபாராதனையும், 3 மணிக்கு அழகியகூத்தர் வீதிஉலாவும் நடைபெற்றது.
செங்கோட்டை
செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, 6 மணிக்கு தாண்டவ தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
அம்பை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள காசிநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு அம்மையப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சப்பரத்தில் எழுந்தருளி காசிநாத சுவாமி கோவிலை வந்தடைந்தார். அங்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஹோமம், கும்ப பூஜை, 4 மணிக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனை, காலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், கோபூஜை, தாண்டவ தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி நான்கு ரத வீதி மற்றும் நான்கு மாட வீதி வழியாக வீதிஉலா வருதல் நடந்தது. பின்னர் சுவாமி மீண்டும் அம்மையப்பர் கோவிலை வந்தடைந்தார்.
Related Tags :
Next Story