கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 3,423 பேர் தேர்வு எழுதினர்
பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 3,423 பேர் தேர்வு எழுதினர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 3,423 பேர் தேர்வு எழுதினர்.
கைரேகை பிரிவு
தமிழக போலீஸ் துறையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு தற்போது போலீசாராக பணிபுரிந்து வருவோரும், இளைஞர்களும் விண்ணப்பித்து இருந்தனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்து இருந்த போலீசாருக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 274 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
இதை தொடர்ந்து நேற்று பொது இளைஞர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, ரோஸ்மேரி பிரைமரி பள்ளி ஆகிய 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 2,460 ஆண்கள், 1631 பெண்கள் என மொத்தம் 4,091 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில் 3,423 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
கண்காணிப்பு
முறைகேடுகளை தடுக்க தேர்வு எழுத வருபவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் நடைமுறை இந்த தேர்வில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி வரிசையாக புகைப்படம் எடுத்து, கைவிரல் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்தனர்.
Related Tags :
Next Story