கார் மீது லாரி மோதல் சுகாதாரத்துறை ஆய்வாளர் பலி - விபத்தில் சிக்கிய கார்
கார் மீது லாரி மோதிய விபத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளர் பலியானார். சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக வருவாய்துறை ஆணையாளர் சத்யகோபால் நேற்று வருகை தருவதாக இருந்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகளும் எஸ்.புதூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
இதில் சிவகங்கையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் பூச்சியியல் வல்லுனர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் மோகன் முத்துரத்தினம் ஆகியோர் ஒரு காரில் சென்றனர். காரை டிரைவர் நாராயணதாஜ் என்பவர் ஓட்டிச்சென்றார். திருப்பத்தூரை அடுத்த காரையூர் அருகே சென்ற போது, எதிரே காய்கறி ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் சென்ற சுகாதார ஆய்வாளர் மோகன் முத்துரத்தினம் (வயது 53) சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கார் டிரைவர் நாராயணதாஸ் (50) சிவகங்கை மருத்துவமனைக்கும், பூச்சியியில் வல்லுனர் ரமேஷ் (54) மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிவகங்கைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் கார் டிரைவரை பார்த்து உடல் நலம் விசாரித்து, சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்பு சிவகங்கை மருதுபாண்டியர் குடியிருப்பில் உள்ள சுகாதார ஆய்வாளர் மோகன் முத்துரத்தினத்தின் வீட்டிற்கு சென்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதுரைக்கு சென்று அங்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பூச்சியியல் வல்லுனர் ரமேசை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story