நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை மீண்டும் மாற்றி அமைக்கப்படும் சித்தராமையா பேட்டி
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை மீண்டும் மாற்றி அமைக்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை மீண்டும் மாற்றி அமைக்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.
யாரும் செல்ல மாட்டார்கள்
கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா நேற்று பாகல்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதா ஒரு மதவாத கட்சி. அந்த கட்சி இப்போது தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. பா.ஜனதா ஒரு மூழ்கும் படகு. அந்த மூழ்கும் படகிற்கு யாராவது செல்வார்களா?. யாரும் செல்ல மாட்டார்கள். மந்திரி பதவியை பலர் எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் சிலருக்கு மட்டும் பதவி கிடைத்துள்ளது.
தகுதியானவர்கள்
மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இயல்புதான். அனைவரும் மந்திரி பதவியை நிர்வகிக்க தகுதியானவர்கள் தான். ஆனால் அனைவருக்கும் மந்திரி பதவி வழங்க இயலாது. காங்கிரசுக்கு 6 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது.
20 பேர் மந்திரி பதவி கேட்டனர். அவர்கள் அனைவரையும் மந்திரியாக்க முடியுமா?. அதனால் 6 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. மந்திரிசபையில் இருந்து 2 பேர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக 2 பேர் நியமிக்கப்பட்டனர்.
மந்திரிசபை
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை மீண்டும் மாற்றி அமைக்கப்படும். மந்திரிகளின் செயல்பாடுகளை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story