பொங்கல் பண்டிகையை வரவேற்க தயாராகும் மஞ்சள்பட்டணம்
பொங்கல் பண்டிகையை வரவேற்க மஞ்சள்பட்டணம் தயாராகி வருகிறது.
பரமக்குடி,
பொங்கல் பண்டிகையை வரவேற்க மஞ்சள்பட்டணம் தயாராகி வருகிறது.
பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது சுவையான கரும்பும், மஞ்சள் கிழங்கு கொத்தும் தான். அந்த மஞ்சள் கிழங்கை ஆண்டுதோறும் பயிரிட்டு மகிழ்கின்றனர் பரமக்குடி மஞ்சள்பட்டணம் பகுதி மக்கள். பரமக்குடியை அடுத்துள்ள மஞ்சள்பட்டணம் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.
இப்பகுதி மக்கள் கால நிலைக்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். வைகை ஆற்றையொட்டி இருப்பதால் எப்போதும் இந்த ஊர் குளுமையாக இருக்கும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ஊர் மக்கள் ஆண்டுதோறும் மஞ்சள் கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். ஆடி மாதம் கடைசியில் மஞ்சள் கிழங்கை பயிரிட்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறுவடை செய்வது வழக்கம்.
இதன்படி இந்த முறையும் மஞ்சள்பட்டணத்தில் ஏராளமானோர் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். பரவலாக தொடர்ந்து பெய்த மழையால் இந்த ஆண்டு அங்கு அதிகஅளவில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. விளைச்சலும் நல்ல முறையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு சில இடங்களில் மட்டும் போதிய மழை இல்லாமல் மஞ்சள் கிழங்கு செடி நன்கு வளராமல் உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதால் அதை வரவேற்க மஞ்சள்பட்டணம் தயாராக உள்ளது. இங்கு விளையும் மஞ்சள் கிழங்குகள் ராமநாதபுரம், இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, முதுகுளத்தூர், கடலாடி உள்பட சுற்றுப்புற ஊர்களுக்கு கொண்டு சென்று விற்கப்படும்.
இது தவிர மொத்த வியாபாரிகளும் இங்கு வந்து வாங்கிச்செல்வார்கள். நன்கு விளைந்துள்ள மஞ்சள் செடிகள் பச்சைப்பசேல் என பார்ப்பதற்கே கண்ணிற்கு குளுமையாக உள்ளது. அறுவடை செய்யும் மஞ்சள் கிழங்கு 1 கொத்து ரூ.10 முதல் விற்பனை செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வியாபாரிகளின் வருகையால் மஞ்சள்பட்டணத்திற்கும் மவுசு கூடும்.
Related Tags :
Next Story