தஞ்சை பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


தஞ்சை பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Dec 2018 4:34 AM IST (Updated: 24 Dec 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு நடராஜருக்கு விபூதி, பால், சந்தனம் உள்ளிட்ட 22 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

பின்னர் நடராஜர் பல்லக்கில் பெரியகோவிலில் இருந்து மேலவீதியில் உள்ள கொங்கணேஸ்வரர் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பெரியகோவிலுக்கு கொண்டுவரப்பட்டார். நேற்றுகாலை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்து நடராஜர் பல்லக்கில் ஊர்வலமாக 4 வீதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டார்.

தஞ்சை பெரியகோவிலில் இருந்து மேளதாளம் முழங்க அஸ்திரதேவர் எடுத்து செல்லப்பட்டு சிவகங்கைபூங்கா குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த குளத்திற்கு செல்லும் வழியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனைக்காக கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கொங்கணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மற்ற சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர் வீதிஉலா நடைபெற்றது.

இதேபோல திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story