3-வது சுரங்கம் அமைக்க முயற்சி என்.எல்.சி.யை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


3-வது சுரங்கம் அமைக்க முயற்சி என்.எல்.சி.யை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2018 10:15 PM GMT (Updated: 23 Dec 2018 11:34 PM GMT)

3-வது சுரங்கம் அமைக்க முயற்சிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம், கம்மாபுரம் பகுதியில் 3-வது திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிலத்தை கம்மாபுரம் பகுதியை சுற்றிலும் உள்ள சுமார் 30 கிராமங்களில் கையகப்படுத்த தீர்மானித்து, அதற்கான முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றியும், கிராமங்களில் டிஜிட்டல் பேனர்களையும் வைத்துள்ளனர். அதோடு என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், கிராமங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு தினசரி ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில், சேத்தியாத்தோப்பு புவனகிரி ஒன்றியம் பெரிய நற்குணம் கிராமத்தில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி என்று அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்திக்கு தங்களது நிலத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட கொடுக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் கைகளில் எங்கள் தாய் மண்ணை தரமாட்டோம், விளை நிலங்களை அழிக்காதே, கோ பேக் என்.எல்.சி., 3-ம் சுரங்க திட்டத்தை கைவிடு என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் பிடித்தபடி பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் கிராம மக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர், தாமாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story