செஞ்சி அருகே இளம்பெண் தீக்குளிப்பு குடிப்பழக்கத்தை நிறுத்தக்கோரி கணவரை மிரட்டியபோது விபரீதம்


செஞ்சி அருகே இளம்பெண் தீக்குளிப்பு குடிப்பழக்கத்தை நிறுத்தக்கோரி கணவரை மிரட்டியபோது விபரீதம்
x
தினத்தந்தி 24 Dec 2018 3:15 AM IST (Updated: 24 Dec 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்தக்கோரி மிரட்டிய இளம்பெண் தீக்குளித்தார். இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி சந்தியா(வயது 23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பழனிவேல் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடியை விட்டு விட்டு வேலைக்கு செல்லுமாறு தனது கணவருக்கு சந்தியா பலமுறை அறிவுரை கூறியதாக தெரிகிறது. இருப்பினும் பழனிவேல் குடிப்பழக்கத்தை கைவிடவில்லை.

சம்பவத்தன்று பழனிவேல் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் மனமுடைந்த சந்தியா தனது கணவரிடம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தால், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டியபடி தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ அவரது உடலில் பற்றி எரியத்தொடங்கியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார்.

இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் சந்தியாவை மீட்டு சிகிச்சைக் காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Next Story