மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் மனு


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் மனு
x
தினத்தந்தி 25 Dec 2018 4:00 AM IST (Updated: 24 Dec 2018 7:58 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும் கலெக்டர் மனுக்களை பெற்று கொண்டார்.

இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 600–க்கும் மேற்பட்ட மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய்பீம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் நடுவே ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. அது குப்பைகள் கொட்டும் இடமாக சீர்கேடு அடைந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து அந்த மைதானத்தை தூய்மைப்படுத்தி உள்ளோம். மீண்டும் சீர்கேடு அடையாமல் இருக்க இந்த மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தண்டராம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாங்கள் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். அனைவரும் ஏழ்மையான சூழலில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீடு, நிலம் இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் வழங்கிய மனுவில், கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சாதி, இருப்பிடம், வருமானம், சிறுவிவசாயிகள் சான்று போன்றவை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழக அரசு அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று கிராம நிர்வாகிகளை பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017–18–ம் ஆண்டுக்கு உண்டான பயிர் காப்பீடு திட்டத்தில் நெல், மிளகாய், உளுந்து போன்றவற்றிற்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

துரிஞ்சாபுரம் ஒன்றியம் மாதலம்பாடி ஊராட்சி பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:–

மாதலம்பாடியில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2007–ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி 65 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 311 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நாள் முதல் போதிய கட்டிட வசதியின்றி உள்ளது.

தற்போது உள்ள வகுப்பறைகளும் காற்றோட்டம் இல்லாத, போதிய வெளிச்சம் இல்லாத, மாணவர்கள் அமர வசதி இல்லாத கட்டிடங்களே ஆகும். இதனால் ஏறத்தாழ 120 மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் மரத்தடியில் பாடம் பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளிக்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலம் நிலம் தானமாக பெறப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்கு தானசெட்டில் மென்ட் செய்யப்பட்டு உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story