கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,
பொதுத்துறை வங்கிகளான பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி போன்ற வங்கிகளை இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை கைவிட வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் சார்பில் நாளை (புதன்கிழமை) வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று வங்கி தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் பரோடா வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேங்கட சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் வங்கி தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கிருஷ்ணன், வெங்கடேஷ்குமார், சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வங்கிகள் இணைப்பு முயற்சியை கைவிட கோரியும், மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் வங்கி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கிருஷ்ணசாமி நன்றி கூறினார். இதில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story